மருதுபாண்டிய சகோதரர்களை தூக்கிலிட்ட இடம் என்று வரலாற்றில் படித்து வழக்கம்போல மறந்திருப்போம். கோயிலின் விசேஷத்தை பார்த்துவிட்டு மருதுபாண்டியரிடம் வருவோம். இந்தியாவிலேயே மூன்று சிவன் சந்நிதிகள், அவர்களுக்கு மூன்று அம்பிகைகள் என்று இருக்கும் ஒரே கோயில் இதுதான். சொர்ணகாளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்று மூவர். இதில் சொர்ணகாளீஸ்வரர் பிரதானம். ஊர் மட்டத்திலிருந்து நான்கு அடி கீழே தங்கக்கவசம் சாத்தப்பட்டு துளியூண்டு இருக்கிறார். இவரை வணங்கினால் பிள்ளைபாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். வரகுணபாண்டிய மன்னன் மீனாட்சியை தினமும் தரிசனம் செய்யாமல் இருக்க மாட்டானாம். காளையார்கோயிலில் தங்கியிருந்தசமயம் அவன் பத்து மாற்று குதிரைகள் உதவியுடன் மதுரைக்குச் சென்று வணங்கி திரும்பி வருவானாம். ஆனால் ஒருநாள் அவ்வாறு செல்லமுடியாமல் போன காரணத்தால், மதுரை சுந்தரேஸ்வரரே மீனாட்சியைக் கூட்டிக்கொண்டு அவனைத்தேடி வந்ததாக புராணம்.

அஷ்டமாகாளிகள் காளையார்கோயிலை சுற்றி அருள்புரிவதால் காளிகளுக்கு ஈசனாய் அமர்ந்தவர் காளீஸ்வரர் ஆனார்

இப்போது மருதுபாண்டியர்கள். 1733-ஆம் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் ஒன்றாய் இருந்த இராமநாதபுரம் சமஸ்தானத்தை இரண்டாக பிரித்து ஒன்றை இராமநாதபுரம் சேதுபதிகளுக்கும் மற்றொன்றை சிவகங்கை வம்சத்தினருக்கும் கொடுத்தனர். முத்து வடுகநாதத்தேவரின் தளபதிகளாய இருந்த மருதுபாண்டியர், தேவரின் வீரமறைவுக்குப் பிறகு வேலுநாச்சியாரின் ஆக்ஞைப்படி ஆட்சியைப் பெற்றார்கள். ஆன்மிகப் பணிகளில் மிகவும் ஈடுபாடு கொண்ட அவர்கள் காளையார்கோயில் கோயில் பிரதான கோபுரத்திருப்பணி செய்திருந்தனர்.

ஆங்கிலேயருக்கு எதிரான போரில் தப்பித்தலைமறைவாகிய நிலையில், ஆங்கிலேய அரசு மருதுபாண்டிய சகோதரர்களைப் பிடிக்க இயலாமல் தவித்தது. வழக்கம்போலவே சதித்திட்டம் சூப்பராய்த் தீட்டி அதன்படி மருதுபாண்டிய சகோதரர்கள் சரண்டர் ஆகவில்லையெனில் அவர்கள் திருப்பணி செய்த கோயில் கோபுரத்தை பீரங்கிகளைக் கொண்டு தகர்த்துவிடுவதாய் மிரட்டியது.

தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, சிவன்கோயில் கோபுரம் அழியக்கூடாது என்று எண்ணிய மருதுபாண்டியர் சரணடைந்தார்கள். அவர்களைத் தூக்கிலிட்டு அவர்களின் கடைசி விருப்பபடியே காளையார்கோயில் சிவ சந்நிதியைப் பார்த்தபடியே அவர்களைப் புதைத்தது ஆங்கில கம்பெனி.

No comments:
Post a Comment